search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிறுவனங்கள் உரிமம்"

    நீரா பானம் உற்பத்தி செய்ய 3 நிறுவனங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிமங்களை வழங்கினார்.
    சென்னை:

    தென்னை சாகுபடி பரப்பில் அகில இந்திய அளவில், தமிழ்நாடு முதலிடத்திலும், தென்னை உற்பத்தியில் 2-ம் இடத்தையும் வகிப்பதோடு, லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு தென்னை வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது.

    தென்னை விவசாயிகளுக்கு உதவிடும் வகையிலும், அவர்களது வருமானத்தை உயர்த்தவும், தமிழ்நாடு அரசு தென்னை மரத்தின் மலராத தென்னம்பாளையில் இருந்து ‘நீரா’ பானத்தை இறக்கவும், அதனை பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய உதவிடும் வகையில், ‘தமிழ்நாடு நீரா விதிகள், 2017’-ஐ வடிவமைத்து, அறிவிக்கை செய்துள்ளது.

    நீரா பானத்தில் இருந்து நீரா வெல்லம், நீரா பாகு, நீரா சர்க்கரை, நீரா சாக்லேட்டுகள், நீரா கூழ், நீரா கேக் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம், கிராமப்புற வேலைவாய்ப்பை பெருக்கவும், விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.



    மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்திடம் பதிவு செய்த தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் மட்டுமே நீரா பானத்தையும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படுவர்.

    இதன் தொடக்கமாக, கோவை மாவட்டத்தில் உள்ள விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், கோவை தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்களுக்கு, நீரா பானம் உற்பத்தி செய்யவும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் உரிமங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    மேலும், தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களில் உள்ள விவசாயிகளுக்கு நீரா வடிப்பது தொடர்பாகவும், நீரா பானத்தில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வது தொடர்பாகவும் தமிழ்நாடு அரசு பயிற்சிகள் வழங்கும். தமிழ்நாடு அரசு குளிர்பதன அலகுகள், பிற எந்திரங்கள் அமைக்கவும், நீரா பானம் மற்றும் அதன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்யவும் உதவிபுரியும்.

    இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, இரா.துரைக்கண்ணு, டாக்டர் சி.விஜயபாஸ்கர், சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தென்னை வளர்ச்சி வாரியத்தின் உயர் அதிகாரி டி.பால சுதாஹரி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 
    ×